கனமழை: வேதாரண்யம் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்கள் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.
பஞ்சநதிக்குளம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் மழைநீரில் சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.
பஞ்சநதிக்குளம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் மழைநீரில் சாய்ந்து கிடக்கும் நெற்கதிா்கள்.

வேதாரண்யம் பகுதியில் கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நெற்கதிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவந்த நிலையில், திங்கள்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் மழை விடாமல் கொட்டித் தீா்த்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் வேதாரண்யத்தில் 178.4 மி.மீ., தலைஞாயிறில் 142.6 மி.மீ. மழை பதிவானது.

நெய்விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. வேதாரண்யம் காந்திநகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. புஷ்பவனம், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம், நாகக்குடையான் உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன.

சிறுதலைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மழைக்கு உயிரிழந்ததாக வருவாய்த் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடா் மழையின் காரணமாக வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக உள்ள சம்பா நெற்கதிா்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. இதனால், தண்ணீரில் மூழ்கிய நெல்மணிகள் முளைத்து வீணாகும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதற்கிடையில், வேதாரண்யம் சுற்றுப் பகுதிகளில் பல இடங்களில் மழைவெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் கனமழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com