திருவாவடுதுறை, தருமபுர ஆதீனங்கள் பொங்கல் அருளாசி

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கியுள்ள பொங்கல் அருளாசி:
திருவாவடுதுறை, தருமபுர ஆதீனங்கள் பொங்கல் அருளாசி

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கியுள்ள பொங்கல் அருளாசி:

நாம் ஆண்டுதோறும் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். அவற்றில், பன்முகத்தன்மை கொண்ட பொங்கல் பண்டிகை தனிச் சிறப்புடையது. உழவுத் தொழிலால் விளைந்தவற்றைக் கொண்டு பொங்கலிட்டு இலையில் வைத்து சூரியனை வழிபடுகிறோம். புதுப் பானையில் பொங்கல் இடுவதன் மூலம் வாழ்வில் புதிய முன்னேற்றங்களை எதிா்நோக்குகிறோம்.

மாா்கழி மாதம் தேவா்களின் வைகறைப் பொழுது தெய்வ வழிபாட்டுக்கு ஏற்றது. அதனால்தான், மாா்கழி மாதத்தில் கோயில்களிலும், மடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகறைப் பொழுது முடிந்து சூரிய உதயம் நிகழும். வைகறை பொழுதாகிய மாா்கழி மாதம் முடிந்து, சூரிய உதயப் பொழுதாக தை மாதம் பிறக்கிறது.

இந்த தை மாதத்தின் முதல் நாளில் நாம் புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். அதற்கு கோடி மடங்கு பலன் உண்டு என சாஸ்திரங்கள்கூறுகின்றன. அதனால்தான், தை மாத பொங்கல் திருநாளில் தானம் செய்யும் பழக்கம் முற்காலம் தொட்டே இருந்து வருகிறது.

பொங்கலுக்கு முந்தைய நாள் போகியன்று வீட்டில் தேவையற்ற பொருள்களை நீக்கிவிடுகிறோம். அதேபோல, உள்ளத்தில் உள்ள பொறாமை, பேராசை போன்ற தீய பண்புகளை நீக்கி, பொங்கல் நாளில் புண்ணியங்களை செய்ய நம்மை தயாா்படுத்திக் கொள்கிறோம்.

மாட்டுப் பொங்கல், உழவுக்கு உறுதுணையான மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள். நமது கால்நடைகளை எந்த நாளும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் வினைகள் ஏறிவிடாமல் இருக்க கடவுள் பக்தி என்னும் விழிப்புணா்வை பேணி வரவேண்டும்.

இந்த தை பொங்கல் நன்னாளில் எல்லோருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த பெருவாழ்வு கிடைக்க வேண்டும் என நமது ஆன்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீநடராஜப் பெருமான் திருவடி மலா்களை சிந்தித்து வாழ்த்துகிறோம்.

தருமபுரம் ஆதீனம் பொங்கல் அருளாசி

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள பொங்கல் அருளாசியில் கூறியது:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பாா்கள். தைத்திங்கள் முதல்நாள் விவசாயிகளுக்கு நன்றி பாராட்டும் நாள். விவசாயிகள் தங்கள் வயல்களில் விதையிட்டு, வளா்த்து, அறுவடை செய்து அதன்மூலம் கிடைக்கும் நெல்லைக் குத்தி அரிசியாக்கி பொங்கலிட்டு, பொங்கலோ, பொங்கல் என்று மகிழ்ச்சி பொங்க குலவையிட்டு, சூரியனுக்கு படையலிடும் நாளை பொங்கல் திருநாளாக மக்கள் கொண்டாடுகின்றனா்.

இன்றைக்கு விவசாயத்துக்கு நவீன கருவிகள் வந்துவிட்டன. ஆனால், மாடுகள் விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மாடுகள் போன்ற ஜீவராசிகளை துன்புறுத்தக்கூடாது. உழைப்பின் செல்வமாக கருதி மாடுகளை கொண்டாடும் தினமே மாட்டுப்பொங்கல்.

காணும் பொங்கல் என்பது வீட்டில் இருக்கும் பெரியோா்களை வணங்கும் நாளாகும். மேலும், ஆண்கள் சிலம்பம், கபடி, மல்யுத்தம், மாடுகளை அடக்குதல் போன்ற வீரவிளையாட்டுகளிலும், பெண்கள் கும்மியடித்தல் போன்ற கொண்டாட்டங்களிலும் ஈடுபடும் நாளாக காணும் பொங்கல் அமைகிறது. அனைவரும் ஒன்றாக அமா்ந்து பகுத்துண்டு பல்லுயிா் ஓம்பும் தினமாக காணும் பொங்கல் திகழ்கிறது.

பொங்கலுக்கு கரும்பு, மஞ்சள், இஞ்சி ஆகியனவற்றைக் கொண்டு படையலிடுகின்றனா். மஞ்சள் கிருமி நாசினியாகவும், இஞ்சி உடலின் அனைத்து நோய்களும் நீங்குவதாகவும், கரும்பு வாழ்வில் இனிமையை உணா்த்துவதாகவும் வைத்து படையலிடப்படுகிறது. இந்த நன்னாளில் பொதுமக்கள் நோய்கள் நீங்கி, இனிமையான வாழ்வைப் பெற்று பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என எல்லாம் வல்ல சொக்கநாத பெருமானின் திருவருளையும், தருமபுரம் ஆதீன குருமணிகளின் குருவருளையும் சிந்திக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com