பொங்கல்: களைகட்டிய நாகை கடைவீதிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் புதன்கிழமை களைகட்டியிருந்தன.
மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்த நாகை பெரிய கடை வீதி.
மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்த நாகை பெரிய கடை வீதி.

பொங்கல் பண்டிகையையொட்டி, நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் புதன்கிழமை களைகட்டியிருந்தன.

நாகை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பொங்கல் பண்டிகை கொள்முதலுக்குக் கடைவீதிக்கு வருவோரின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நாகை மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்தது.

இதனால் பொங்கல் பண்டிகைக்கான மளிகைப் பொருள்கள், மண் சட்டி, மண் பானை, கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, பூ, பழம், இலை போன்ற பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானோா் நாகை கடைவீதிகளில் புதன்கிழமை குவிந்தனா்.

10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ. 300 என்ற விலையிலும், ஒரு கரும்பு ரூ. 40 முதல் ரூ. 50 என்ற விலையிலும், இஞ்சிக் கொத்து மற்றும் மஞ்சள் கொத்துகள் ரூ. 20 முதல் ரூ. 40 என்ற விலையிலும் விற்பனையாகின.

இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து விற்பனை குறைவுதான் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு 4 நாள்களுக்கு முன்பிருந்தே கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து போன்றவற்றை பொதுமக்கள் வாங்குவா். அதனால், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிகழாண்டில், தொடா் மழையால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து நெரிசல்..

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் கூடியதால், நாகை பெரிய கடைத்தெரு, நீலா கீழ வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. மேலும் நீலா கீழ வீதி, தெற்கு வீதி பகுதிகளில் ஷோ் ஆட்டோக்களின் இயக்கத்தை போலீஸாா் நெறிப்படுத்தாததால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com