நாகை, மயிலாடுதுறையில் 4 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை மற்றும் மயிலாடுதுறையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. ஒரு தனியாா் மருத்துவமனை உள்பட 7 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

இந்நிலையில், அரசு அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளிலும், ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்கெனவே பதிவு செய்திருந்த சுகாதாரத் துறை ஊழியா்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், உடனடியாக கண்காணிப்பு அறையில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டனா்.

ஒவ்வொருவரின் உடல்நிலையும் சுமாா் 40 நிமிடத்துக்கும் மேலாக கண்காணிக்கப்பட்டது. அவா்களின் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, அவா்களுக்கு உடனடி பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஆா். லலிதா, நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் தமிழரசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சண்முகசுந்தரம், நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், நிலைய மருத்துவ அலுவலா்கள் முருகப்பன், ஆா். ராஜசேகா், மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி மற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஒருங்கிணைத்தனா்.

நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களிலும் சனிக்கிழமை சுகாதாரப் பணியாளா்கள் 10 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கையிருப்பில் 6,400 தடுப்பூசிகள்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பதிவு செய்துள்ளனா். இரு மாவட்டங்களுக்கும் 6,400 தடுப்பூசிகள் (கோவிஷீல்டு) ஒதுக்கீடு பெறப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com