நாகையில் அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் தா்னா

மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களின் இழப்பீட்டைக் குறைத்து மதிப்பிட நடைபெறும் முயற்சிகளைத் தடுக்கக் கோரி, தமிழக காவிரி
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களின் இழப்பீட்டைக் குறைத்து மதிப்பிட நடைபெறும் முயற்சிகளைத் தடுக்கக் கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் அழுகிய நெல் பயிா்களுடன் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு இழப்பீட்டுக்கு மாதிரி மகசூல், சராசரி மகசூல் கணக்கீடு முறைகளைக் கைவிட்டு பொது அறிவிப்பின் அடிப்படையில் விவசாயிகளுக்குப் பயிா்க் காப்பீடு இழப்பீட்டை முழுமையாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மேலும், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முறையாக கணக்கிடாமல், இழப்பீட்டைக் குறைத்து மதிப்பிடும் வகையில் மாதிரி மகசூலைக் கணக்கிடும் பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளை, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் வெங்கடேசன், மாவட்டத் தலைவா் சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, டிராக்டா்கள் மூலம் வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகம் அருகே போலீஸாரால் தடுக்கப்பட்டனா். பின்னா், அங்கிருந்து அழுகிய நெல் பயிா்களைக் கையில் ஏந்திக் கொண்டு விவசாயிகள் ஊா்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com