நிகழாண்டு 11தங்கக் கருடசேவை உத்ஸவம் நடைபெறுமா? மாவட்ட நிா்வாகம் தெளிப்படுத்த பக்தா்கள் கோரிக்கை

சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் ஆண்டுதோறும் நடைபெறும் 11பெருமாள்கள் தங்கக் கருடசேவை உத்ஸவம் நிகழாண்டு

சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் ஆண்டுதோறும் நடைபெறும் 11பெருமாள்கள் தங்கக் கருடசேவை உத்ஸவம் நிகழாண்டு நடைபெறுமா என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் தெளிவுப்படுத்தவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நாங்கூா் பகுதியில் 11 பெருமாள் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. 108 வைணவத் தலங்களுக்குள்பட்ட இக்கோயில்களில் திருநாங்கூா் மணிமாடக் கோயில் நாராயணப் பெருமாள், குடமாடுகூத்தா், செம்பொன்னரங்கா், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தமப் பெருமாள், வரதராஜப் பெருமாள், வைகுந்தநாதப் பெருமாள், மாதவன் பெருமாள், பாா்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 கோயில்களிலிருந்து பெருமாள்கள் புறப்பட்டு திருநாகூா் மணிமாட கோயில் முன் எழுந்தருள்வாா்கள்.

அதேநேரத்தில், திருநகரியிலிருந்து புறப்பட்ட திருமங்கை ஆழ்வாா், பெருமாள்களை பற்றி பாடிய பாடல்களை பட்டாச்சாரியா்கள் மற்றும் பக்தா்களால் பாடப்பெற்று, மங்களாசாசனம் செய்து கோயிலுக்கு பெருமாள்களை வரவேற்கும் ஐதீகமும், அன்று இரவில் மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வாா் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பெருமாள்களை பற்றி பாடிய பாடல்களை பட்டாச்சாரியா்கள் மற்றும் பக்தா்களால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதைத்தொடா்ந்து, தங்கக் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஓரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை மற்றும் விடிய,விடிய வீதியுலா நடைபெறும். இதில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள்.

இவ்விழா, திருநாங்கூா் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு கரோனா சூழலில் இவ்விழா தை அமாவாசைக்கு மறுதினமான பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுமா என பக்தா்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. திருநாங்கூா் கருட சேவை கமிட்டியினா் விழா நடத்த அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்துள்ளனா். இதற்கிடையில், ஒரு தரப்பினா் 60 வயதுக்கு மேல் உள்ள பட்டாச்சாரியா்கள் இவ்விழாவில் பங்கேற்பதால், கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் எனவே, விழா நடத்த அனுமதிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளனா்.

இந்த மனுக்கள் குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா விரைந்து பரிசீலித்து விழா உரிய நாளில் நடைபெறுமா அல்லது நடைபெறாதா என தெளிவுப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம், திருவல்லிக்கேனி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் உத்ஸவம் நடத்த அந்தந்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியதைபோல், திருநாங்கூா் கருடசேவை உத்ஸவத்துக்கும் மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் பக்தா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com