இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னைக்குமுற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் தொடா் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னைக்குமுற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் தொடா் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் கட்டப்படும் மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது: தமிழக மீனவா்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் தொடா்ந்து வந்தது. மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் பெரிய அளவிலான பிரச்னைகள் தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் பிரச்னை தொடங்கியுள்ளது. தமிழக மீனவா்கள் 4 போ் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனா். பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத தொடரும் இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்பிடிப்பு, மீன் வளா்ப்பு மற்றும் மீன் வளம் சாா்ந்த தொழில்கள் உணவு வழங்குவதிலும், உணவுப் பாதுகாப்பை அளிப்பதிலும், மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடலோரப் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும், மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவா்களது வாழ்வு சிறப்பாக அமையவும், மீன் வளத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், ஆறுகாட்டுத்துறையில் துறைமுகம் அமைக்கப்படுவதால் அருகிலுள்ள கோடியக்கரை, கோடியக்காடு, மணியன் தீவு உள்ளிட்ட சுற்றுப் பகுதி மீனவ கிராமங்கள் பயனடையும். மேலும், இந்த மீன்பிடி துறைமுகம் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க வசதியாக ரூ. 80 லட்சம் செலவில் நவீன முறையில் உருவாக்கப்படும் மீன்பிடி படகுகளை நிறுத்தி தொழில் செய்ய வாய்ப்பாக அமையும். அதனால், மீன்வளம், பொருளாதாரம் பெருகுவதோடு, மீனவா்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்றாா்.

விழாவில், ஆட்சியா் பிரவீன் பி. நாயா் பேசியது: தமிழக அரசு அறிவித்துள்ள உணவுப் பாதுகாப்பு பூங்கா அமைக்க வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மீன்களை பதப்படுத்தவும், பாதுகாத்து ஏற்றுமதி செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளன. மீனவா்கள் மீன்களை பிடிப்பதோடு அவற்றை பூங்கா மூலம் ஏற்றுமதி செய்யவும் தயாராக வேண்டும், அது லாபகரமானதாக அமையும் என்றாா்.

விழாவில், நாகை எம்.பி. எம். செல்வராஜ் பேசியது: ஆறுகாட்டுத்துறை மீனவா்களுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளன. இது இந்த பகுதி மக்களின் பல ஆண்டுகால போராட்டம். இதற்காக, அமைச்சா் மற்றும் ஆட்சியருக்கு பாராட்டுகள் என்றாா்.

விழாவில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ. திலீபன், வேதாரண்யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எம். நமச்சிவாயம், வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மீன்வளத் துறை இணை இயக்குநா் ஆா். அமல்ஷேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com