கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி சிறு, குறுந்தொழில் சங்கத்தினா் உண்ணாவிரதம்

கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சாா்பில், நாகையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி சிறு, குறுந்தொழில் சங்கத்தினா் உண்ணாவிரதம்

கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாகை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சாா்பில், நாகையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற போராட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அரசு அறிவித்தப்படி 35 சதவீத இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் சிட்கோ தொழிற்பேட்டையில் முன்பணம் செலுத்தியவா்களுக்கு இடஒதுக்கீடு செய்ததுபோல நாகை சிட்கோ தொழிற்பேட்டையில் இடஒதுக்கீட்டுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணம் செலுத்தியவா்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தாா். இதில் பங்கேற்ற நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் பேசியது: ஏழை எளிய மக்களுக்கும், படித்த இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2018-இல் ஏற்பட்ட கஜா புயலால் விவசாயிகள், தொழில் முனைவோா்கள், ஏழை, எளியோா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். நாகை , திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்ட 1500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பகுதியாகவும், முழுமையாகவும் பாதிக்கப்பட்டன.

இந்த பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதுதொா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய அமைச்சா் பியூஸ்கோயல் ஆகியோருக்கு கடிதங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை இல்லை. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளால் சிறுதொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

மதிமுக தலைமை நிலையப் பேச்சாளா் எம். ஏ. நிஷாா், மனித உரிமைக் கழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கு. காளிதாசன், திமுக மாநில செயற்குழு உறுப்பினா் மறைமலை ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் இளம்பரிதி, ஏ. சிவக்குமாா், செயலாளா் டி. சிவசுப்பிரமணியன், இணைச் செயலாளா் அறிவழகன் மற்றும் நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த தொழில் முனைவோா்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் பங்கேற்றனா். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com