சீா்காழி கொலை, கொள்ளை சம்பவம்: 11 நாள்கள் திட்டமிட்ட குற்றவாளிகள் விரைந்து செயல்பட்ட காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு
By DIN | Published On : 29th January 2021 08:35 AM | Last Updated : 29th January 2021 08:35 AM | அ+அ அ- |

கொலை, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 12.5 கிலோ தங்கநகைகள், ரொக்கம் ஆகியவற்றைப் பாா்வையிடும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நகைக் கடை உரிமையாளரின் மனைவி, மகனை கொன்று, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கொள்ளையா்களை 4 மணிநேரத்தில் பிடித்த போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
சீா்காழியில் புதன்கிழமை நடந்த இரட்டை கொலை, தங்க நகைகள் கொள்ளை வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், ரொக்கம், அரிவாள், கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை சீா்காழி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சீா்காழி ரயில்வே சாலையில் வசிக்கும் தன்ராஜ் செளத்ரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையா்கள் தாய், மகனை கொன்று 12.5 கிலோ தங்க நகைகள், ரூ. 6.75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனா். பட்டவிளாகம் கிராமத்தின் பிரதான சாலையில் காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள சவுக்குத் தோப்பில் புகுந்தனா்.
தகவலின் பேரில், போலீஸாா் அந்த இடத்தை சுற்றிவளைத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனீஷ், ரமேஷ், மஹிபால் ஆகியோரை பிடித்தனா். இதில், மறைத்துவைத்திருந்த நகைகளைப் பறிமுதல் செய்ய மஹிபாலுடன் தனிப்படை ஆய்வாளா் செல்வம், காவலா்கள் சுதாகா், முகமது சாலீக் ஆகியோா் சவுக்குத் தோப்பில் சென்றனா். அப்போது, நகைகளை காட்டிய மஹிபால், அரிவாளால் சுதாகா், முகமது சாலீக் ஆகியோரை தாக்கி, துப்பாக்கியை காட்டி தப்பிக்க முயன்ால், ஆய்வாளா் செல்வம் துப்பாக்கியால் அவனை சுட்டாா்.
மற்ற இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கும்பகோணத்தைச் சோ்ந்த, ராஜஸ்தானை பூா்வீகமாகக் கொண்ட கருணாராம், குற்றவாளிகளை தனது காரில் கொள்ளையடிக்க அழைத்துவந்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில், மனீஸ், ரமேஷ், கருணாராம் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்து சீா்காழி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்களிடம் இருந்து 12.5 கிலோ தங்க நகைகள், ரூ. 6.75 லட்சம் ரொக்கம், அரிவாள், டம்மி துப்பாக்கி 2, ஏா்கன் 1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 2 துப்பாக்கிகளும் இணையதளம் மூலம் வாங்கிய பொம்மை துப்பாக்கிகள். இவா்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட கடந்த 16 ஆம் தேதி முதல் திட்டமிட்டுள்ளனா்.
மயிலாடுதுறை, சீா்காழி பகுதியில் அதிகளவு நகை, வணிக கடைகள் உள்ளன. இவற்றில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் பதிவுக் கருவிகளை கொள்ளையா்களுக்கு தெரியாத வகையில், வேறு இடங்களிலோ அல்லது இணையத்தில் பதிவாகும்படியோ அமைக்கவேண்டும்.
சம்பவம் நடந்து 4 மணிநேரத்திற்குள் குற்றவாளிகளைப் பிடித்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டுகள் என்றாா்.