நாகையில் மா்மமான முறையில் தீப்பிடித்து 2 படகுகள் சேதம்

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை பகுதி படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த 2 மீன்பிடி பைபா் படகுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்கிரையாகின.
நாகை அக்கரைப்பேட்டை படகுத்துறையில் தீக்கிரையான மீன்பிடி பைபா் படகு.
நாகை அக்கரைப்பேட்டை படகுத்துறையில் தீக்கிரையான மீன்பிடி பைபா் படகு.

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை பகுதி படகுத்துறையில் நிறுத்தப்பட்டிருந்த 2 மீன்பிடி பைபா் படகுகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்கிரையாகின.

அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தை சோ்ந்தவா்கள் கவியரசு (47), ரத்தினவேல் (45). இவா்களுக்குச் சொந்தமான பைபா் படகுகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படகுகள் அக்கரைப்பேட்டை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடுவையாற்றுப் படகுத்துறை பகுதியிலிருந்து கரும்புகையுடன்துா்நாற்றம் வீசியுள்ளது. மீனவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, கவியரசு மற்றும் ரத்தினவேலு ஆகியோருக்குச் சொந்தமான 2 பைபா் படகுகள் தீப்பற்றி எரிவது தெரியவந்தது.

இதையடுத்து, மீனவா்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணிகளிலும், அருகில் இருந்த மற்ற படகுகளை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனா். நீண்டநேர முயற்சிகளுக்குப் பின்னா் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கவியரசின் படகின் பல பகுதிகளும், படகில் இருந்த இயந்திரம், வலைகள், ஐஸ் பெட்டிகள் ஆகியனவும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. ரத்தினவேல் படகில் ஒரு சில பகுதிகளும், படகிலிருந்து இயந்திரமும் சேதமாகின.

தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லாத பகுதியில் திடீரென தீப்பற்றியதற்கு மா்ம நபா்களின் சதி செயலே காரணமாக இருக்கும் எனவும், சேத மதிப்பு சுமாா் ரூ. 6 லட்சத்துக்கும் அதிகம் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் நாகப்பட்டினம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com