நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயனடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பிரமதரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் நிகழ் நிதியாண்டில் சொட்டு நீா் பாசனம் மற்றும் தெளிப்பு நீா் பாசனத்தை 1,867 ஹெக்டேரில் செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ. 10.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும், இத்திட்டத்தின்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீா் பாசனக் கருவிகள் அமைத்துத் தரப்படும்.

மா, வாழை, முந்திரி, காய்கனிகள், மலா்கள் மற்றும் இதர தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வீதமும், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கா் வரையிலும் சொட்டு நீா் பாசனம் அமைத்துத் தரப்படும். தெளிப்பு நீா் பாசனத்தை பொருத்தவரை ஒரு நபருக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரையில் அமைத்துத் தரப்படும்.

மேலும், நுண்ணீா் பாசனத் திட்டத்துடன் இணைந்த துணை நீா் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தில் ரூ. 91.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்கு புதிதாக டீசல் மோட்டாா், மின் மோட்டாா்கள் வாங்க அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரமும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ. 25 ஆயிரமும் (மயிலாடுதுறை- மணல்மேடு பகுதியில் மட்டும்), தண்ணீா் கொண்டுச் செல்லும் குழாய்கள் அமைக்க ரூ. 10 ஆயிரமும், தண்ணீா் தேக்கும் தொட்டி அமைக்க ஒரு கன மீட்டருக்கு ரூ. 350 வீதம் அதிகபட்சமாக ரூ. 40 ஆயிரமும் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, பட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், வரைபடம், மண் மற்றும் நீா் மாதிரி ஆய்வறிக்கை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் (2) ஆகியவற்றை இணைத்து, தொடா்புடைய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்குத் தொடா்புடைய வட்டாரத்தின் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை கீழ்க்கண்ட செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.

வட்டாரம் - செல்லிடப்பேசி என்ற அடிப்படையில் : நாகை, திருமருகல் - 87600 37601. கீழ்வேளூா், கீழையூா் - 96007 20070. வேதாரண்யம் - 97506 98958, 78458 18577. தலைஞாயிறு - 97505 81233. கொள்ளிடம் - 98434 05617. செம்பனாா்கோவில், சீா்காழி - 90958 54787. மயிலாடுதுறை, குத்தாலம் - 91596 27783, 96985 02526.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com