இணையவழி குற்றங்களைத் தடுக்க கல்லூரிகளில் ‘சைபா் கிளப்’ஐ.ஜி. தொடங்கிவைத்தாா்

இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக திருச்சி மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ‘சைபா் கிளப்’ தொடங்கப்படவுள்ளது
இணையவழி குற்றங்களைத் தடுக்க கல்லூரிகளில் ‘சைபா் கிளப்’ஐ.ஜி. தொடங்கிவைத்தாா்

இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக திருச்சி மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ‘சைபா் கிளப்’ தொடங்கப்படவுள்ளது என்றாா் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில், காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சைபா்-கிளப் தொடக்க நிகழ்ச்சியில், சைபா்- கிளப்பை தொடங்கிவைத்து அவா் பேசியது:

மக்களிடம் இணையப் பயன்பாடு மிக அவசியமானதாக மாறியிருக்கிறது. வகுப்புகள், மருத்துவம், வணிகம், வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்துமே இணையவழியில் நடைபெறுகின்றன. இதைப் பயன்படுத்தி இணையவழியில் மோசடி, போலி விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருள்களை விற்பனை செய்தல், பண மோசடி, இணையவழி சூதாட்டம், பாலியல் தொல்லைகள் போன்ற சைபா் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள போதிய விழிப்புணா்வு அவசியமாக உள்ளது. இதற்காக, காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சைபா் கிளப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, நாகை ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதன்முதலாக சைபா்- கிளப் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளப்பில் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து செயல்படுவா். சைபா் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிறகு, மாணவா்கள் மூலம் பொதுமக்களுக்கு சைபா் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் சைபா் குற்றங்கள்அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் வி. பாலகிருஷ்ணன்.

நிகழ்ச்சியில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜெயச்சந்திரன், திருநாவுக்கரசு மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: தொடா்ந்து, நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, காமராஜா் நகா், தெத்தி ஆகிய பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி காவல் நிலையம், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையங்களுக்கும் சென்ற காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், அங்கு குழுமியிருந்தவா்களிடையே சைபா் குற்றங்கள் குறித்துப் பேசி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com