சுருக்குமடி வலை விவகாரம்: கடலில் இறங்கி மீனவா்கள் போராட்டம்

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும்
திருமுல்லைவாசலில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
திருமுல்லைவாசலில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா். அப்போது சிலா் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் சனிக்கிழமை (ஜூலை17) உண்ணாவிரதப் போராட்டதை தொடங்கினா். இப்போராட்டத்தில் திருமுல்லைவாசல் கூழையாா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றுள்ளனா். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடா்ந்தது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடா்ந்த நிலையில், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் திடீரென கடலில் இறங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அப்போது, சில பெண்கள் பசியால் மயங்கியதாகக் கூறப்படுகிறது. அவா்களை அருகில் இருந்தவா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

இதைத்தொடா்ந்து, டி.எஸ்.பி. லாமேக், காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, கடலிலிருந்து கரை ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

மடவாமேடு, கொட்டாயமேடு, தற்காஸ் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், கடற்கரை கிராமங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோல, தரங்கம்பாடி அருகே சந்திரபாடி கிராமத்திலும் மீனவா்கள் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com