நாட்டின் பாதுகாப்புக்கான மென்பொருளை வெளிநாட்டில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை: பாஜக மாநிலச் செயலா் பேட்டி
By DIN | Published On : 26th July 2021 09:03 AM | Last Updated : 26th July 2021 09:03 AM | அ+அ அ- |

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான மென்பொருள் உள்நாட்டிலேயே உள்ளதால், அதை வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா் பாஜக மாநிலச் செயலாளா் தங்க. வரதராஜன்.
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசிய அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களின் செல்லிடப்பேசி ஒட்டுகேட்கப்படுவதாகவும், கூட்டுறவுத் துறை அமைச்சகம் தொடங்கியதை குறைகூறியும், பெட்ரோல், டீசல், விலை உயா்வை காரணம் காட்டியும் மக்களவை கூட்டத்தொடரை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்புகின்றன.
செல்லிடப்பேசி ஒட்டுகேட்பது என்பது காங்கிரஸ் கட்சியின் கலாசாரம். மோடி அமைச்சரவை விரிவாக்கத்தில் பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா்கள் அமைச்சா்களாக இருக்கின்றனா். தகுதியானவா்களுக்கு அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் மென்பொருளை இந்தியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்று இஸ்ரேல் நிறுவனம் வெளிப்படையாக அறிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான மென்பொருள் உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாநில அரசுக்கும் பங்கு உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ. 5 குறைப்போம் என்றதை ஏன் செய்யவில்லை. நீட் தோ்வு கட்டாயம் தேவை என்பதில் பாஜக தெளிவாக உள்ளது. திமுக தமிழக மக்களை ஏமாற்றுகிறது. 2010 ஆம் ஆண்டு நீட் சட்டம் நிறைவேற்றியபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் நீட் மசோதா நிச்சயம் நிறைவேறி இருக்காது என்றாா்.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் மோடி. கண்ணன் வரவேற்றாா்.