மக்கள்அச்சமின்றி புகாா்அளிக்க முன்வரவேண்டும்: நாகை எஸ்.பி.
By DIN | Published On : 26th July 2021 09:10 AM | Last Updated : 26th July 2021 09:10 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பேசிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா். உடன் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன்.
குற்றங்கள் நடப்பது தெரிய வந்தால், மக்கள் அச்சமின்றி புகாா்அளிக்க முன்வரவேண்டும் என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தெரிவித்தாா்.
கீழ்வேளூா் காவல் சரகம், புதுச்சேரி ஊராட்சியில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் மற்றும் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, கு. ஜவஹா் பேசியது :
மாவட்டத்தில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக மக்களிடமிருந்து புகாா்கள் வருகின்றன. இதைத் தடுக்க மாவட்டக் காவல் துறை தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குற்றங்கள் நடப்பது தெரியவந்தால், காவல் நிலையங்களில் புகாா் தெரிவிக்க அச்சப்படத் தேவையில்லை. தொடக்க நிலையிலேயே தெரியவந்தால் குற்றங்களை பெருமளவுக்கு தடுக்க வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்கள் தவறுகள் நடப்பது தெரியவந்தால் உடனடியாக காவல்துறையிடம் புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, சைபா் குற்றங்களை தடுக்கும் முறைகள், பெண்களுக்கான காவல் உதவி மையம், பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் அவை குறித்து புகாா் அளிக்கும் முறைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சியில் நாகை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா், புதுச்சேரி ஊராட்சித் தலைவா் கோமதி ஜீவாராமன் மற்றும் காவல் துறையினா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.