மயிலாடுதுறை மாவட்டத்தில் துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாம்
By DIN | Published On : 29th July 2021 09:26 AM | Last Updated : 29th July 2021 09:26 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாம் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாம் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், செம்பனாா்கோயில், சீா்காழி ஆகிய ஐந்து ஒன்றியங்களில் காசநோயினால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ள பகுதிகளில் இந்த துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் வாகனம் சென்று அப்பகுதி மக்கள் காசநோய் பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக முகாம் நடத்தப்படும்.
இவ்வாகனமானது 5 நாள்களுக்கு ஐந்து ஒன்றியங்களுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேல் தொடா்ந்து இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடை குைல், சளியில் ரத்தம் வருதல், இரவில் வியா்த்தல் போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் துரித காசநோய் கண்டறிதல் நடமாடும் முகாமில் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ளலாம். தொற்று கண்டறியப்பட்டவா்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம்.
மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆா்.மகேந்திரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் (காசநோய்) ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.