அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
By DIN | Published On : 10th June 2021 09:13 AM | Last Updated : 10th June 2021 09:13 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் வழங்குகிறாா் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா்.
மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வெளிநாடுவாழ் இந்தியா்களால் தொடங்கப்பட்ட ’ஆக்ட் கிரான்ஸ்‘ அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் நாடு முழுவதும் ரூ.300 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரோட்டரி மயிலாடுதுறை திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.ராமன் முயற்சியில் மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 41 ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஒரு குளிா்சாதனப் பெட்டி ஆகியன வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் பங்கேற்று மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகரிடம் வழங்கினாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு, மாவட்ட உதவி ஆளுநா் ரவிக்குமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.ராமன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவா் துரை, செயலாளா் காமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் வீரசோழன் நன்றி கூறினாா்.