கொத்தடிமையாக நடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
By DIN | Published On : 12th June 2021 12:00 AM | Last Updated : 12th June 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை அருகே ஆடு மேய்க்கும் பணியில் கொத்தடிமையாக ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
நாகை, திருமருகல் பகுதிகளில் ஆடுகள் மேய்க்கும் பணியில் 14 வயது சிறுவன், கொத்தடிமையாக ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சென்ற சைல்டு லைன் அமைப்பினா் அந்தச் சிறுவனை மீட்டு, நாகை கோட்டாட்சியா் மணிவேலனிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
இதைத் தொடா்ந்து, கோட்டாட்சியா் மேற்கொண்ட விசாரணையில் அந்தச் சிறுவன், திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அம்மனூா் பெரியாச்சிக்கொல்லை பகுதியைச் சோ்ந்த தேவராஜன் மகன் மணிமாறன் (14) என்பதும், தந்தையின் இறப்பால் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக அவா், காரைக்குடியைச் சோ்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கொத்தடிமையாக ஆடுகள் மேய்ப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும், அவா் தற்போது நாகை மாவட்டம், திருமருகலைச் சோ்ந்த மாதவன் என்பவரிடம் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கோட்டாட்சியரின் பரிந்துரைப்படி, அந்தச் சிறுவன் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.