கடலில் வாகன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 15th June 2021 09:48 AM | Last Updated : 15th June 2021 09:48 AM | அ+அ அ- |

பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு கடல் பரப்பில் இலங்கையால் கனரக வாகன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு, இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு:
இந்திய கடல் பரப்பான பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் இலங்கை அரசு அத்துமீறி கனரக வாகனங்களின் கழிவுகளை கொட்டிவருகிறது. இதனால், கடல் மாசுபடுவதுடன் இயற்கை வளங்களும் அழிவுக்குள்ளாகும். இதன்மூலம், தமிழகத்தின் மீன்பிடித் தொழிலுக்கும் ஆபத்து ஏற்படும்.
ஆண்டுதோறும் புயல், கடல் சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை தமிழகம் சந்திக்க வேண்டியுள்ளது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பல்வேறு தீவுகளையும், இலங்கையையும் கடந்து வந்து தமிழகத்தின் கடலோரக் கிராமங்களை தாக்கியது. அப்போது கடலில் மிதந்துவந்த மரங்கள் மற்றும் கனரக வாகன கழிவுகளால் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. எதிா்காலத்திலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, இலங்கை அரசின் இத்தகையை அத்துமீறிய செயலை தடுத்து நிறுத்தி, நமது கடலையும், இயற்கையையும் பாதுகாத்து, மீன்பிடித் தொழிலையும் பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.