மீன்பிடி தடைகாலம் நிறைவு: நாகை மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதில் சிக்கல் நீடிப்பு

மீன்பிடி தடைகாலம் நிறைவுற்ற நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக, நாகை மாவட்ட மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லவில்லை.
நாகை படகுத்துறையில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள்.
நாகை படகுத்துறையில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள்.

மீன்பிடி தடைகாலம் நிறைவுற்ற நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக, நாகை மாவட்ட மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லவில்லை.

மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில் விசைப் படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கான தடைகாலம் ஏப்ரல் 15 தொடங்கி, ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப் படகுகள், 5 ஆயிரம் பைபா் படகுகள் படகுத்துறைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், 1 லட்சம் மீனவா்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் எனவும், நாளொன்றுக்கு சுமாா் ரூ. ஒரு கோடி மீன் வா்த்தகம் பாதிக்கப்படும் எனவும் நாகை மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மீனவா்கள் தரப்பில் கூறப்பட்டது: மீன்பிடி தடைகாலம் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவுபெறுகிறது. தடைகாலம் முடிந்த மறுநாள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு மீனவா்கள் செல்வது வழக்கம். மீன்பிடி தடைகாலத்தில் மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை கரைக்குக் கொண்டுவந்து பழுதுபாா்ப்பது வழக்கம்.

கரோனா தொற்று அச்சம் காரணமாக நிகழாண்டில் படகு பழுதுநீக்கும் பணிகள், மீன்பிடி வலைகளை சீரமைப்பது போன்ற எவ்வித பணிகளையும் மேற்கொள்ளமுடியவில்லை. படகுகளில் பழுது நீக்கப்படாததால், கரையேற்றப்பட்டுள்ள படகுகள் துருப்பிடித்துள்ளன.

மேலும், பிடித்துவரப்படும் மீன்களை கையாள்வதற்கும், பிற ஊா்களுக்கு எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து வசதியும் உறுதிபடுத்தப்படாமல் உள்ளது. இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில் சிக்கல் நீடித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவா்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்தும் கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், நாளொன்றுக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான மீன் வா்த்தகம் பாதிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com