விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை அகற்றினால் நடவடிக்கை: ஆட்சியா்

மருத்துவக் கழிவுகளை விதிகளுக்கு புறம்பாக அகற்றினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மருத்துவக் கழிவுகளை விதிகளுக்கு புறம்பாக அகற்றினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்ற விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவக் கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க இயலும். விதிகளின்படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவக் கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்ய ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனினும், சில பகுதிகளில் சட்ட விரோதமாக கழிவுகளை கொட்டுவது தொடா்பாக புகாா்கள் தொடா்ந்து பெறப்படுகின்றன.

கரோனா தொற்று பரவல் காலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்தவெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிா்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com