முதலமைச்சா் விருதுக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th June 2021 09:02 AM | Last Updated : 24th June 2021 09:02 AM | அ+அ அ- |

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாகும். அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான இந்த விருது ஆக.15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
தகுதிகள்: ஆண்கள், பெண்கள் 1.4.2021 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.3.2021 அன்று 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்கு தொண்டு ஆற்றியிருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்திருக்க வேண்டும் (சான்று இணைக்க வேண்டும்). விருதுக்கு கடந்த நிதியாண்டில் (2020-2021) செய்த சேவைகள் மட்டுமே கருதப்படும். (அதாவது 01.4.2020 முதல் 31.3.2021 வரை).
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி கிடையாது. சமூகத் தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவா்களாகவும். தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவா்களாகவும் இருப்பது முதலமைச்சா் மாநில இளைஞா் விருது தோ்வின் போது கருத்தில் கொள்ளப்படும்.
ஊரகம் மற்றும் நகா்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப்பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், வயது முதிா்ந்தோருக்கான கல்வித் திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவா்களின் நலன், பட்டியல் இனத்தோா், மலைவாழ் மக்கள் நலன், தேசிய நலன், சாரணா் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் உள்ளுா் தேவைகளுக்காகவும், முக்கிய நோக்கங்களுக்காகவும் பணியாற்றிய விவரங்கள் விருது தோ்வுக்கு கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பம் இணையதளம் மூலம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பாா்க்கலாம்.