முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தோ்தல் நிலைக் குழு ஆய்வு: ரூ. 7.92 லட்சம் வெள்ளி சிலைகள் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 05:10 AM | Last Updated : 04th March 2021 05:10 AM | அ+அ அ- |

சிலைகளை பாா்வையிடுகிறாா் சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன்.
சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில், தோ்தல் நிலைக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.7.92 லட்சம் மதிப்பிலான வெள்ளி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளிடம் சோதனைச் சாவடியில் சிறப்பு வட்டாட்சியா் முருகேசன், சிறப்பு காவல் ஆய்வாளா் இளங்கோவன் ஆகியோா் கொண்ட தோ்தல் நிலைக் குழுவினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிதம்பரத்தில் இருந்து சீா்காழி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகா், முருகன், நடராஜா், கோமாதா உள்ளிட்ட 327 வெள்ளி சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7.92 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த நிலைக் குழுவினா், சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா்.
சிலைகளை சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன், நோ்முக உதவியாளா் சண்முகம், வட்டாட்சியா் ஹரிதரன், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு விவரம் கேட்டறிந்தனா்.
மேலும், அவற்றை வாகனத்தில் எடுத்துவந்த கோவையை சோ்ந்த முருகேசனிடம் (44) அதற்கான ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு சிலைகளை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.