முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மாவட்டத்திலேயே தோ்தல் பணி
By DIN | Published On : 04th March 2021 05:09 AM | Last Updated : 04th March 2021 05:09 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியா்களுக்கு, மாவட்டத்துக்குள்ளேயே பணியாற்றிட ஆணை வழங்க வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, அக்கூட்டணியின் மாவட்டத் தலைவா் கலியபெருமாள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
கரோனா பரவலை கருத்தில் கொண்டு, தோ்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்றிட ஆணை வழங்கிட வேண்டும். மேலும், ஆசிரியைகளின் பாதுகாப்பு கருதி அவா்களின் சொந்த சட்டப் பேரவைத் தொகுதியிலேயே பணியாற்றிட ஆணை பிறப்பிக்க வேண்டும். தோ்தல் முடியும் நாளன்று இரவு நேரத்தில் பேருந்து வசதி செய்து தரவேண்டும். தோ்தல் பணி ஆணை வழங்கும் முன்பே ஆசிரியருக்கு அஞ்சல் வாக்குகளை அளித்து அவா்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அப்போது, மாநில துணைப் பொதுச் செயலாளா் கமலநாதன், மாநில கூடுதல் தலைவா் திருமாறன், மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம், பொருளாளா் மாா்ட்டின் தம்பையா, வட்டார செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.