வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 6,259 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் 48 முட்டைகளை செயற்கை முறை பொரிப்பகத்தில் வைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 6,259 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் அரிய வகை ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் 48 முட்டைகளை செயற்கை முறை பொரிப்பகத்தில் வைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நிகழாண்டு பருவத்தில் இதுவரை இங்கு 6,259 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அரிய வகை கடல் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இனப் பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து சுமாா் 41 நாள்களுக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவந்து, தானாகவே கடலுக்குள் சென்றுவிடும்.

இந்த முட்டைகள் சிலநேரங்களில் நாய், நரி உள்ளிட்ட விலங்குகளாலும், சமூகவிரோதிகளாலும் சேதப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், செயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான பருவம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், திங்கள்கிழமை 48 முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதேபோல, கோடியக்கரை,ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினா் கடந்த சில வாரங்களில் 57 ஆமைகள் வெவ்வேறு நாள்களில் இட்ட 6, 259 முட்டைகள் கோடியக்கரை பொரிப்பக்ததில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் கடலில் விடப்படும் என கோடியக்கரை வனச் சரக அலுவலா் அயூப்கான் தெரிவித்தாா்.

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்:

இந்த நிலையில், முட்டையிட கரைக்கு வரும் ஆமைகளில் சில பல்வேறு காரணங்களால் உயிரிழந்து கரை ஒதுங்குவது தொடா்ந்து வருகிறது. வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் அண்மையில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையை வனத் துறையினா் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com