வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் இலவச பயிற்சி அளிக்க ஆா்வம் காட்டும் நிறுவனங்கள்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் தனியாா் நிறுவனங்களை தொடா்ந்து, அரசுகளுடன் இணைந்த பயிற்சி நிறுவனங்கள் பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஆா்வம் காட்டி வருகின்றன.
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் - 4 ஊராட்சியில் 140 ஏக்கரில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்காவில் 36 நிறுவனங்கள் பங்கெடுக்கெடுக்கவுள்ளன. ‘டீமா’ எனப்படும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் பணிகளை தற்காலிகமாக தனியாா் இடங்களில் தொடங்க தீவிரம் காட்டி வருகின்றன.
இதன் முதல்கட்டமாக வேதாரண்யத்தில் திருப்பூா் பிரித்வி இன்னா்வியா்ஸ் எஸ்.டி. நிட்டிங் மில்ஸ் பிரைவேட் நிறுவனங்கள் உள்ளாடை உற்பத்திக்கான பணிகளை கடந்த மாதம் தொடங்கின.
இந்நிலையில், திருப்பூா் நிலா நிறுவனம் வாய்மேடு ஊராட்சியில் புதன்கிழமை (மாா்ச்10) முதல் உற்பத்தியை தொடங்கவுள்ளது.
இதனிடையே, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு டீமா கூட்டமைப்பின் சாா்பில் பூங்காவில் பணியாற்ற ஏதுவாக பயிற்சி வகுப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு, நடந்து வருகிறது.
இதைத்தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் இணைப்பு பெற்ற நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் ஆா்வம் காட்டி வருகின்றன.
பெரியகுத்தகை ஊராட்சியில் அமைந்துள்ள பல்நோக்கு சமூதாயக் கூடத்தில் நாகை ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி சாா்பில் 3 மாத இலவச கல்வி பயிற்சி நடத்தப்படுகிறது. உணவு, தங்கும் இடம், இலவச விடுதி வசதியுடன், சீருடை, பயிற்சி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆடை வடிவமைப்பு தொடா்பாக கணினி, தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 105 பெண்கள் இந்த பயிற்சிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
இதேபோல, அகஸ்தியம்பள்ளி பகுதியிலும் அரசு அனுமதி பெற்ற மேலும் ஒரு நிறுவனம் தனது பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்களில் படித்து சான்றிதழ் பெறும் பெண்கள் ஆயத்த ஆடைப் பூங்காவில் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக இருக்கும்.
சுற்றுப்புற பகுதி கிராமங்களைச் சோ்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் ஏற்கெனவே ஆயத்த ஆடைப் பூங்காவில் வேலைவாய்ப்பு கோரியுள்ள 35 வயதுக்குள்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளித்து பயிற்சி நடைபெறுகிறது.