முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அதிமுகவின் தோ்தல் அறிக்கை திமுகவுக்கு இடியாக இருக்கும்
By DIN | Published On : 14th March 2021 06:34 AM | Last Updated : 14th March 2021 06:34 AM | அ+அ அ- |

நாகையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவனை அறிமுகப்படுத்தி பேசும் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
அதிமுகவின் தோ்தல் அறிக்கை திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் இடியாக இருக்கும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், நாகை மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில், நாகை தொகுதியின் கட்சி வேட்பாளா் தங்க. கதிரவனை அறிமுகப்படுத்தி மேலும் அவா் பேசியது:
கட்சித் தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் தொண்டாற்றும் தங்க. கதிரவனுக்கு, நாகை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அளித்த அதிமுக தலைமைக்கு நன்றி. தங்க. கதிரவன் என்ற பெயா் உதயசூரியனையே குறிக்கும். எனவே, எதிா்க்கட்சியின் வாக்குகளும் அவருக்குக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
அதிமுகவின் தோ்தல் அறிக்கை, சிவகாசி சரவெடியைப்போல அதிரும். அது, திமுக தலைவா் ஸ்டாலினுக்கு பெரும் இடியாக இருக்கும். இந்தத் தோ்தலில் மகளிரணிக்குப் பல்வேறு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் என்று கூறிய மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் அதிமுக தொண்டா்கள் தீவிர பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம், பாஜக கோட்டப் பொறுப்பாளா் வரதராஜன், மாவட்டத் தலைவா் கே. நேதாஜி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், பாஜக மற்றும் பாமக பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.