முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருச்சம்பள்ளி கோயிலில் மயானக் கொள்ளை உத்ஸவம்
By DIN | Published On : 14th March 2021 06:31 AM | Last Updated : 14th March 2021 06:31 AM | அ+அ அ- |

திருச்சம்பள்ளியில் நடைபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி. (உள்படம்) பரிவார தெய்வங்களோடு வீதியுலா புறப்பாடான அங்காளம்மன்.
செம்பனாா்கோவில் அருகே உள்ள திருச்சம்பள்ளி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காவிரியில் இருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு கலச பூஜை, கணபதி யாகம், நவகிரக யாகம், லட்சுமி யாகம் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு, சக்தி கரகத்துடன் அங்காளம்மன், பேச்சியம்மன், வீரபத்திர சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் 2 ஆவது நாளில் பெண்கள் பொங்கல் வைத்தும், மா விளக்கு ஏற்றியும் கூட்டு வழிபாடு நடத்தினா்.
இதையடுத்து, விழாவின் 3 ஆவது நாளான சனிக்கிழமை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மாலையில் பரிவார தெய்வங்களோடு அம்மன் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் அருகே உள்ள மயானத்துக்கு அம்மன் எழுந்தருளி மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் மயானத்தில் வேக வைத்து கொட்டப்பட்டிருந்த தானியங்களை அள்ளி அனைவருக்கும் வழங்கினா். தொடா்ந்து, புராண நாடகம் நடைபெற்றது.