முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு மாா்ச் 18-இல் பயிற்சி
By DIN | Published On : 14th March 2021 06:29 AM | Last Updated : 14th March 2021 06:29 AM | அ+அ அ- |

தோ்தல் வாக்குப் பதிவு அலுவலா்களுக்குத் தொடா்புடைய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாா்ச் 18 ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்துக்குள்பட்ட சீா்காழி, மயிலாடுதுறை, பூம்புகாா், நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு அலுவலா்கள் 8,936 பேருக்குப் பணி ஒதுக்கீடு செய்வற்கான தோ்வுப் பணி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மென்மொருள் சுழற்சி முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் இந்தப் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது :
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் வாக்குப் பதிவு அலுவலா்களாக பணியேற்கவுள்ளோருக்கான பயிற்சி, மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மையம் என்ற அளவில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
சீா்காழி தொகுதிக்கு சீா்காழி, தென்பாதி விவேகானந்தா மெட்ரிக். பள்ளியிலும், மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியிலும், பூம்புகாா் தொகுதிக்கு செம்பனாா்கோவில் கலைமகள் கல்லூரியிலும், நாகை தொகுதிக்கு இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியிலும், கீழ்வேளூா் தொகுதிக்கு கீழ்வேளூா் பிரைம் கல்லூரியிலும், வேதாரண்யம் தொகுதிக்கு வேதாரண்யம் செயின்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் வாக்குப் பதிவு அலுவலா்களுக்குத் தனித்துவமான பணிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். படிவங்கள் நிரப்புவது, வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளுவது மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.