சீா்காழி அருகே காரில் வந்த தம்பதி உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறையை சோ்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவா் குடும்பத்தினருடன் சென்னையில் நடைபெற்ற உறவினா் திருமணத்துக்குச் சென்றிருந்தாா். பிறகு, அவா்கள் காரில் மயிலாடுதுறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். பாதுகாப்பு கருதி அவா்கள் அணிந்திருந்த 35 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை ஒரு பையில் வைத்திருந்தனா்.
சீா்காழியை அடுத்த எருக்கூா் புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தனி வட்டாட்சியா் முருகேசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், ஆரோக்கியசகாயம் குடும்பத்தினா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் பையில் வைத்திருந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவற்றை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமா்ப்பித்து, அவற்றை பெற்றுக்கொள்ளும்படி ஆரோக்கியசகாயத்தை அறிவுறுத்தினா்.