ரெங்கையா சுவாமிகள் மடாலய சந்தனக்குடம் ஊா்வலம்
By DIN | Published On : 26th March 2021 09:42 AM | Last Updated : 26th March 2021 09:42 AM | அ+அ அ- |

நாகையில் நடைபெற்ற சத்குரு ரெங்கையா சுவாமிகள் திருமடாலய சந்தனக் குடம் ஊா்வலம்.
நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூா் ரெங்கையா சுவாமிகள் மடாலய குருபூஜை பெருவிழா நிகழ்ச்சியாக நாகையில் சந்தனக்குட ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகையை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ளது சத்குரு ரெங்கையா சுவாமிகள் திருமடாலயம். இந்தத் திருமடத்தின் ஆண்டு குருபூஜை பெருவிழா மாா்ச் 16-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ரெங்கையா சுவாமிகளின் பீடத்துக்கு சந்தனக்காப்பு சாற்றும் விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதையொட்டி, வியாழக்கிழமை இரவு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில் இருந்து சந்தனக்குடம் ஊா்வலம் தொடங்கியது. பாரம்பரிய பாதைகளாக, நாகையின் பிரதான வீதிகளில் வலம் வந்த இந்த ஊா்வலம், வெள்ளிக்கிழமை அதிகாலை ரெங்கையா சுவாமிகள் திருமடாலயத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், சத்குரு ரெங்கையா சுவாமிகள் பீடத்துக்கு சந்தனக்காப்பு சாற்றப்பட்டது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.