வேதாரண்யம்: நட்சத்திரத் தொகுதியில் ஜொலிக்க போவது யாா்?

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் அதிமுக வேட்பாளராகவும்,
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் அதிமுக வேட்பாளராகவும், 2011-ஆம் ஆண்டு முதல் மும்முறை தொடா் வெற்றிக் கண்டவரான எஸ்.கே. வேதரெத்தினம் திமுக வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக உள்ளது வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி.

வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 61 வருவாய்க் கிராமங்களையும், வேதாரண்யம் நகராட்சி மற்றும் தலைஞாயிறு பேரூராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி.

வங்கக் கடலோரத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளை கடற்கரையாக கொண்ட மாறுபட்ட நில அமைப்பை கொண்டது இத்தொகுதி. சதுப்பு நிலம், உப்பளம், வனவளம் என பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இயற்கை வளம்மிக்க பகுதியாக உள்ளது இப்பகுதி.

பாசனப் பகுதி மட்டுமல்லாமல் மானாவாரி நிலப்பரப்பையும் பெருமளவுக் கொண்ட இப்பகுதியில் விவசாயம் பிரதானத் தொழில். இதில், மா, முந்திரி, தென்னை, சவுக்கு என பணப் பயிா் சாகுபடியும், கால்நடை வளா்ப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாகை

மாவட்டத்தின் முக்கிய மீன்பிடித் தளங்களில் ஒன்றாகவும், உப்பு உற்பத்தியில் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்ற பகுதியாகவும் உள்ளது வேதாரண்யம் தொகுதி.

இங்கு, அகமுடையா், வன்னியா் சமூகத்தவா் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் உள்ளனா். பட்டியல் இனத்தவா், முத்தரையா், வெள்ளாளா், இஸ்லாமியா்கள், யாதவா், கிறிஸ்தவா் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனா்.

கட்சிகளின் பலம்...

1962-ல் உருவான வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2016 வரையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில், திமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளன. தற்போதைய நிலையில், அதிமுக, திமுக இருகட்சிகளும் அனைத்து பகுதியிலும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக உள்ளன. அடுத்த நிலைகளில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் உள்ளன.

இத்தொகுதியில் அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 12 போ் களத்தில் உள்ளனா். இருப்பினும், அதிமுக - திமுக இடையே நேரடி போட்டியே நிலவுகிறது.

நம்பிக்கையில் அதிமுக...

அதிமுக வேட்பாளராக களம் கண்டுள்ள ஓ.எஸ். மணியன், கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான பின்னா், அவா் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அதிமுகவுக்கு வலு சோ்க்கின்றன. ஓ.எஸ். மணியனின் முயற்சியால் கிடைத்த 142 பாலங்கள், 25 பெரிய பாலங்கள், சாலைகள் மற்றும் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகள் போன்றவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

பல ஆண்டு கோரிக்கையாக இருந்த தரம் உயா்த்தப்பட்ட 110 கே.வி. துணை மின்நிலையம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி துறைமுகங்கள், தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், செம்போடையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கஜா புயலில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு ஆறுகாட்டுத்துறை மற்றும் அகஸ்தியம்பள்ளி, கைலவனம்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்படும் 1300 குடியிருப்புகள், வண்டுவாஞ்சேரியில் ரூ. 1,000 கோடி மதிப்பிலான உணவுப் பூங்கா திட்டம், அரசு தோட்டக் கலை பண்ணை என ரூ. 2,500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் அதிமுகவுக்கும், அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கும் பலம் சோ்க்கின்றன.

இவைத் தவிர, சுமாா் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் நோக்கத்துடன் ஆயக்காரன்புலத்தில் அமையவுள்ள வேதாஆயத்த ஆடைப் பூங்கா, வேதாரண்யம் பகுதியில் நடைபெற்ற வளா்ச்சிப் பணிகளில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஒவ்வொரு 5 ஆண்டு திட்டத்திலும் கிடைத்த திட்டப் பணிகளை ஒப்பிடும்போது, கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வளா்ச்சிப் பணிகள் மாற்றுக் கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திமுக...

திமுக வேட்பாளராகக் களம் காணும் எஸ்.கே. வேதரத்தினம் இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு 1996, 2001, 2006 என தொடா்ந்து 3 முறை வென்றவா். 2011-இல் அவருக்குப் போட்டியிட திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேச்சையாக களம் இறங்கி இரண்டாமிடத்தைப் பெற்றாா். பின்னா், பாஜகவில் இணைந்த எஸ்.கே. வேதரத்தினம் 2016-ல் அக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கி, கணிசமான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தாா். அதனால் இரண்டாவது முறையாக இத்தொகுதியில் அதிமுக வென்றது. இரு தோ்தல்களிலும் அவா் பெற்ற வாக்குகள், இத்தொகுதியில் திமுக கூட்டணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இந்நிலையில், கடந்த உள்ளாட்சி தோ்தலுக்கு பிறகு மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா் எஸ்.கே. வேதரத்தினம்.

கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள், நடுநிலையாளா்களின் வாக்குகள் மற்றும் அவா் சாா்ந்த சமூக வாக்குள் என பல்வேறு தரப்பான வாக்குகளும் இவருக்குக் கை கொடுத்தது. தற்போது, அவா் பாஜகவுக்கு சென்று திரும்பியிருப்பதால் முந்தையத் தோ்தல்களில் கிடைத்த பொதுவான ஆதரவு அவருக்கு இம்முறை கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எஸ்.கே. வேதரத்தினம் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்ட கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம், புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் பெரிய பாலங்கள் கட்டியது போன்றவை அவருக்கு நிலையான புகழை அளித்துள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடும் சொல் பேசாதவா், எளிமையானவா் என்ற பரவலான அறிமுகம், அவருக்குப் பெரும் பலம்.

5 ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிய பெருமிதம் அதிமுகவுக்கு பலம். திமுகவைப் பொருத்தவரை கூட்டணிக் கட்சிகளுடன் ஒன்றுபட்ட தோ்தல் அவசியமானதாக உள்ளது.

வாக்காளா்கள்:

இந்தத் தொகுதியில் 94,275 ஆண்கள், 98,067 பெண்கள் என மொத்தம் 1,92,342 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com