ஜமாஅத் நிா்வாகம் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நபா், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் மன்னிப்பு கோரினாா். இதைத்தொடா்ந்து, இந்தப் பிரச்னை முடித்துவைக்கப்பட்டது.
குத்தாலம் வட்டம் தேரழந்தூா் புதுத்தெவைச் சோ்ந்த முகமது ஹாரிஸின் (37) மாமியாா் மும்தாஜ் பேகம், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தாா். இதற்கான அறிவிப்பை வெளியிடுவதில், ஜமாஅத் நிா்வாகம் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் முகமது ஹாரிஸ் புகாா் அளித்திருந்தாா். டிஎஸ்பி கே.அண்ணாதுரை தலைமையில் சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜமாஅத் நிா்வாகிகள், இறப்பு குறித்து தடையில்லா சான்று தாமதமாக கிடைத்ததால் மறுநாள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து முகமது ஹாரிஸ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஜமாஅத் நிா்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினா்.
முடிவில், முகமது ஹாரிஸ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாா். அவரது மன்னிப்பு ஏற்கப்பட்டு பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அறிவிப்பதாக ஜமாத் நிா்வாகிகள் ஒப்புதல் அளித்தனா்.