சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் புலவர் நா. தியாகராசனார் மறைவு

சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் புலவர் நா. தியாகராசனார் காலமானார்.
சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் புலவர் நா. தியாகராசனார் மறைவு

சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் புலவர் நா. தியாகராசனார் காலமானார்.
புலவர் நா. தியாகராசனார் (93) 16.12.1928 ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பெரும்பள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்தவராவார். தமிழ்ப்புலவர் பட்டம் பெற்ற இவர் தம் வாழ்நாள் முழுவதையும் பூம்புகார்ப் பற்றிய வரலாற்று, தொல்லியல் ஆய்வுகளுக்கே அர்ப்பணித்தார். எவ்வித ஊதியப் பணியிலும் இல்லாமல் தம்முடைய சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருடைய உதவியின்றிப் பூம்புகார்ப் பற்றிய வரலாற்று, தொல்லியல், இலக்கிய ஆராய்ச்சிகளை அறிஞர்கள் யாரும் இதுவரை மேற்கொண்டதில்லை எனலாம். 
ஆராய்ச்சியாளர் பலருக்கும் உறுதுணையாகவும் நடமாடும் தகவல் கருவூலமாகவும் திகழ்ந்தவர். 1959 –ஆம் ஆண்டும் ’மாதவி மன்றம்’ என்ற ஒன்றினைத் தொடங்கி அதன் வாயிலாக, சதாசிவ பண்டாரத்தாரை ஆசிரியராகக் கொண்டு ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்னும் நூலை வெளியிட்டார். மேலும், ‘பூம்புகார்ப் பண்பாட்டு மையம்’ என்ற ஒன்றினையும் தொடங்கி நடத்தி வந்தார். சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட பெருமைக்குரியவர். இதனால் இவர் ‘சிலம்புத் தென்றல்’ என்ற பட்டம்பெற்றுப் போற்றப்பட்டார். 
பூம்புகார்த் தமிழ்ச்சங்கச் செயலாளராகவும் இருந்து வந்தவர். ’பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். பூம்புகாரைச் சுற்றி அகழாய்வு செய்யப்பெற்ற இடங்களையும், வரலாற்றிடங்களையும், கோயில்கள் பற்றிய செய்திகளையும் நிரம்ப விளக்கும் திறம்படைத்தவர். தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த பல்வேறு பொருட்களையும் நாணயங்களையும் பூம்புகார் அகழ்வைப்பகத்திற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் ஏனைய ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுத்து உதவியுள்ளார். 
பூம்புகாரில் கலைக்கூடம் மற்றும் ஏனைய மன்றங்கள் அமைவதற்குப் பெரும்பங்கு ஆற்றியவர். சிலப்பதிகார மாநாடுகள் பலவற்றை நடத்தி வெற்றி
கண்டவர். மேலும் இந்திர விழா இடையறாது நடைபெற அரும்பாடு பட்டவர். மேலப்பெரும்பள்ளம் என்னும் சிற்றூரில் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்துப் பெருமளவில் நன்மைகளைச் செய்துள்ளார். அவ்வூரில் பள்ளி, மருத்துவமனை ஆகியவை அமைவதற்குப் பெருந்துணை புரிந்தவர். பூம்புகார்க் கலைக்கல்லூரி அமைவதற்கு நிலத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவர் இவராவார். 
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் அவ்வூரினைச் சுற்றியுள்ள இந்துசமய அறநிலையக் கோயில்களுக்கு அறங்காவலராகப் பணியாற்றியிருக்கின்றார். பொதுவாழ்விலும் ஆராய்ச்சியுலகிலும் ஒப்பற்ற அளவில் மிகவும் நேர்மையுடன் பயணித்த புலவர் நா. தியாகராசனார் 27.03.2021 அன்று உடல்நலக்
குறைவால் இயற்கை எய்தினார். இவருடைய இழப்பு பூம்புகார்ப் பற்றிய வரலாற்றாய்விற்கும் குறிப்பாகச் சிலப்பதிகார ஆராய்ச்சியுலகிறகும் பேரிழப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com