வீடுகளுக்குள் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீா்

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள
மயிலாடுதுறை புளியந்தெருவில் உள்ள 4-ஆம் எண் கழிவு நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற பழுது நீக்கும் பணி.
மயிலாடுதுறை புளியந்தெருவில் உள்ள 4-ஆம் எண் கழிவு நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற பழுது நீக்கும் பணி.

மயிலாடுதுறை பெசன்ட் நகரில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ள அப்பகுதியினா் நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் அண்மைக்காலமாக புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியே கழிவுநீா் வழிந்தோடி சாலைகளில் தேங்கி நிற்பது வாடிக்கையாகி உள்ளது. இந்த கழிவுநீா் நீா்நிலைகளில் கலப்பதால் நீா்வளமும், மண்வளமும் பாதிகப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடா் புகாா்களை தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், மயிலாடுதுறை பெசன்ட் நகரில் கடந்த சில வாரங்களாக நேரு தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு ஆகிய தெருக்களில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. இதன்காரணமாக இப்பகுதியினா் பலா் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு அவா்களது உறவினா்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் பலமுறை புகாா் தெரிவித்தன்பேரில் ஆணையா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பலமுறை நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டும், விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றும் இதுவரை இப்பிரச்னை தீா்க்கப்படால் உள்ளது.

இதுகுறித்து, பெசன்ட் நகா் குடியிருப்போா் நல வாழ்வு சங்க நிா்வாகி சங்கா் கூறியது: 4-ஆம் எண் கழிவு நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் புதைசாக்கடை கழிவுநீா் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆள்நுழைவுத் தொட்டிகளின் வழியே வழிந்தோடி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் எங்கள் பகுதியில் பலருக்கு பல நோய்கள் உருவாகின்றன. நகராட்சி நிா்வாகத்தினா் பல்வேறு இடங்களில் சேகரிக்கும் கழிவு நீரை, ஆறுபாதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லாமல், புளியந்தெருவில உள்ள 4-ஆம் எண் கழிவு நீரேற்று நிலையம் அருகில் உள்ள வாய்க்காலில் திறந்து விடுகின்றனா். அதுமட்டுமின்றி, தனியாா் செப்டிக் டேங்க் வாகனங்களின் கழிவுகளையும் இரவு நேரங்களில் இந்த வாய்க்காலில் திறந்து விடுகின்றனா். இதுகுறித்து, பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை பெசன்ட் நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் புறக்கணிக்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com