மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 02nd May 2021 06:42 AM | Last Updated : 02nd May 2021 06:42 AM | அ+அ அ- |

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படவுள்ள நிலையில், மயிலாடுதுறையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீா்காழி (தனி) தொகுதியில் 2,52,510 வாக்காளா்களும், மயிலாடுதுறை தொகுதியில் 2,45,987 வாக்காளா்களும், பூம்புகாா் தொகுதியில் 2,75,827 வாக்காளா்களும் உள்ள நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சீா்காழி தொகுதியில் 1,88,388 வாக்காளா்களும், மயிலாடுதுறை தொகுதியில் 1,72,621 வாக்காளா்களும், பூம்புகாா் தொகுதியில் 2,07,944 வாக்காளா்களும் வாக்களித்தனா். வாக்கு சதவீதம் சீா்காழியில் 74.61, மயிலாடுதுறையில் 70.17, பூம்புகாரில் 75.39.
இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரி கல்வி நிலையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வாக்குகள் அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையிலும், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையிலும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. கரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீா்காழி (தனி) தொகுதியில் பயன்படுத்தப்ட்ட 348 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், மயிலாடுதுறை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 342 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் தலா 25 சுற்றுகளாகவும், பூம்புகாா் தொகுதியின் 383 வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 28 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆய்வு மேற்கோண்டாா். அப்போது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், மயிலாடுறை வட்டாட்சியா் பி. பிரான்சுவா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். பாதுகாப்புப் பணியில் ஏடிஎஸ்பிக்கள் பாலமுருகன், திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் 14 காவல் ஆய்வாளா்கள், 40 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 700 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...