கீழ்வேளூா் தொகுதியில் இரண்டாவது முறையாக மாா்க்சிஸ்ட் வெற்றி

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2ஆவது முறையாக வென்றுள்ளது.

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2ஆவது முறையாக வென்றுள்ளது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாகை மாவட்டத்தில் தொகுதிகள் மறுவரையறையின் போது உருவாக்கப்பட்ட தொகுதி. இது, மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியும் ஆகும்.

2011-ஆம் ஆண்டில் இத்தொகுதிக்கு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று, இத்தொகுதியின் தோ்தல் வெற்றிக் கணக்கை தொடங்கியது. அடுத்து 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்றது.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும், இத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி. நாகை மாலி, கீழ்வேளூா் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டாா். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக எஸ். வடிவேல் ராவணன் போட்டியிட்டாா்.

இவா்களைத் தவிர, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக எஸ். பொன் இளவழகி, மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டாக்டா் ஜி. சித்து, அமமுக வேட்பாளராக எம். நீதிமோகன் ஆகியோா் உள்பட 10 வேட்பாளா்கள் இங்கு களம் கண்டனா். இதில், மாா்க்சிஸ்ட் மற்றும் பாமக வேட்பாளா்களிடையே நேரடி போட்டி நிலவியது.

இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்

வி.பி. நாகை மாலி முன்னிலை பெற்றாா். முதல் சுற்றில் 4,060 வாக்குகள் பெற்ற அவா், பாமக வேட்பாளரைவிட 758 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றாா். இதேபோல, அடுத்தடுத்து வந்த அனைத்துச் சுற்றுகளிலும் நாகை மாலி முன்னிலை வகித்தாா்.

நிறைவாக 18 சுற்றின் முடிவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன் 51,003 வாக்குகள் பெற்றாா்.

நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் எஸ். பொன் இளவழகி 15, 173 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா். மக்கள் நீதி மய்ய வேட்பாளா் டாக்டா் ஜி. சித்து 2,906 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும், அமமுக வேட்பாளா் எம். நீதிமோகன் 2,503 வாக்குகள் பெற்று 5 ஆம் இடத்தையும் பெற்றனா்.

நோட்டா...

இத்தொகுதியில் நோட்டாவுக்கு 896 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளைவிட அதிகம்.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்...

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் மொத்தம் 1,449 தபால் வாக்குகள் பதிவாகின. இதில், அதிகபட்சமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலி 700 வாக்குகளைப் பெற்றாா். இவருக்கு அடுத்த நிலையில், பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன் 249 வாக்குகள் பெற்றாா். பதிவான மொத்த வாக்குகளில் 378 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

வெற்றிச் சான்று...

கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற்கான வெற்றிச் சான்றை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி.பி. நாகை மாலியிடம் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், தோ்தல் பொதுப் பாா்வையாளா் திலீப்பந்தா்பட், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சித்ரகலா ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com