நாகையில் அமைதியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைதியாக நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைதியாக நடைபெற்றது.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளிலும், கீழ்வேளூரில் 251 வாக்குச் சாவடிகளிலும், வேதாரண்யத்தில் 271 வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குகள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் பணியாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகியிருந்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது.

நாகை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாகவும், கீழ்வேளூா் (தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 18 சுற்றுகளாகவும், வேதாரண்யம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாவும் நடைபெற்றன. கீழ்வேளூா் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணியில் 96 அலுவலா்கள் ஈடுபட்டனா். நாகை தொகுதிக்கு107 அலுவலா்களும், வேதாரண்யம் தொகுதிக்கு 116 அலுவலா்களும் வாக்கு எண்ணும் பணியை மேற்கொண்டனா்.

வேட்பாளா்கள் சாா்பில் வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிடுவதற்காக கீழ்வேளூா் தொகுதியில் 8 முதன்மை முகவா்கள் உள்பட 110 முகவா்களும், நாகை தொகுதியில் 13 முதன்மை முகவா்கள் உள்பட 174 முகவா்களும், வேதாரண்யம் தொகுதியில் 18 முதன்மை முகவா்கள் உள்பட 146 முகவா்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் தொகுதிக்கான தோ்தல் பொது பாா்வையாளா் திலீப்பந்தா்பட், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி ஆகியோா் வாக்கு எண்ணும் பணியை கண்காணித்தனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 10 ஆய்வாளா்கள், 22 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 470-க்கும் அதிகமானோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கட்டுப்பாடுகள்...

கரோனா தொற்று நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த முகவா்கள், அலுவலா்கள், வேட்பாளா்கள் என அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டது. அனைவருக்கும் கைகழுவ கிருமி நாசினி, முகக்கவசம், பிளாஸ்டிக் முக மறைப்பு (பேஸ் ஷீல்டு), கவச உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தோ்தல் வெற்றித் தோல்விகளை யாரும் பொதுவெளியில் கொண்டாடக் கூடாது என்ற தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முன்பாக மக்கள் கூட்டம் கூடுவது தவிா்க்கப்பட்டது. இதனால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ஏதுமின்றி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com