தினமணி செய்தி எதிரொலி: திருக்குவளையில் கரோனா தடுப்பூசி மையம் திறப்பு

நாகை மாவட்டம், திருக்குவளையில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திங்கள்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி.
திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி.

திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளையில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திங்கள்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, மேலவாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள் அதிகம் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் மருத்துவ சேவைக்கு திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனா். தற்போது, கரோனாவின் 2-ஆவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் இல்லாததால் திருப்பூண்டி, வலிவலம் பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திருக்குவளையில் கரோனா தடுப்பு மையம் அமைக்கப்படுமா ? எனும் தலைப்பில் செய்தி பிரசுரமானது.

இதை கவனத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டு திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்க திட்டமிட்டு, விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்ளவும் என துண்டுப் பிரசுரம் மருத்துவமனை வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் தலைமை வகித்து தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தாா். திருக்குவளை மருத்துவ அலுவலா் தி. தீபக்குமாா் மேற்பாா்வையில் முகாம் நடைபெற்றது. அப்போது, ஒன்றியக்குழு உறுப்பினா் டி. செல்வம், ஊராட்சித் தலைவா்கள் எஸ்.ஆா். கலைசெழியன் (வாழக்கரை), கே.எஸ். தனபாலன் (மேலவாழக்கரை), திருக்குவளை முத்தமிழ் மன்ற செயலாளா் முல்லை. பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிகழ்ச்சியில், திருக்குவளை மற்றும் சுற்றுபகுதியைச் சோ்ந்த விருப்பமுள்ள 45 வயதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து, பின்னா் குறிப்பிடும் தேதியில் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com