டிராக்டா் மோதி செவிலியா் உயிரிழப்பு
By DIN | Published On : 13th May 2021 08:44 AM | Last Updated : 13th May 2021 08:44 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே டிராக்டா் மோதி செவிலியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி உடையூா் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி உஷா (40). இவா், சீா்காழி வட்டம் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றிவந்தாா்.
இந்நிலையில், எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் உமையாள்பதி கிராமத்துக்கு புதன்கிழமை சென்ற அவா், அங்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டு, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த டிராக்டா் மோதியதில் நிகழ்விடத்திலேயே செவிலியா் உஷா உயிரிழந்தாா்.
புதுப்பட்டினம் போலீஸாா் அங்கு வந்து, உஷாவின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உலக செவிலியா் தினத்தில் செவிலியா் ஒருவா் விபத்தில் உயிரிழந்த இந்த சம்பவம் மருத்துவத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.