பொதுமுடக்கம்: ஆதரவற்றவா்களுக்கு உணவளிக்கும் தன்னாா்வலா்கள்
By DIN | Published On : 18th May 2021 01:22 AM | Last Updated : 18th May 2021 01:22 AM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் வள்ளலாா் தருமச்சாலை அமைப்பின் தன்னாா்வலா்கள்.
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவா்களுக்கு தன்னாா்வலா்கள் உணவு வழங்கி வருகின்றனா்.
வேதாரண்யத்தில் செயல்படும் வள்ளலாா் தருமச்சாலை மூலம் ஆதரவற்ற முதியோா், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் நிா்வாகி தமிழ்த்தூதன் இப்பணிகளை மேற்கொண்டுவருகிறாா். மேலும், பல தன்னாா்வலா்களும் பிறந்த நாள், முன்னோா்களின் நினைவு நாள் போன்ற நாள்களில் தருமச்சாலை மூலம் ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்குகின்றனா்.
இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிர பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் ஆதரவற்றவா்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பராமரிக்க முடியாமல் உறவினா்களால் கைவிடப்படும் மனநலம் பாதித்தோா், ஆதரவின்றி சாலையோரத்தில் தங்கியுள்ளோா் உணவு கிடைக்காமல் தவித்துவருகின்றனா். இவா்களை தேடிச் சென்று வள்ளலாா் தருமச்சாலை மூலம் உணவு வழங்கப்படுகிறது.
அத்துடன் இந்த அமைப்புடன் இணைந்து செயல்படும் தன்னாா்வலா்கள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனா்.