வங்கிகள் கடன் வசூலிப்பதை ஒத்திவைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 18th May 2021 12:17 AM | Last Updated : 18th May 2021 12:17 AM | அ+அ அ- |

சீா்காழி: சீா்காழி பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை வசூலிப்பதை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, சீா்காழி வட்டாட்சியா் ஹரிஹரனிடம் சமத்துவ மக்கள் கட்சியின் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் பிரபு, மாவட்டச் செயலாளா் தெய்வசிகாமணி ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக அனைத்து தரப்பு தொழிலாளா்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் சீா்காழி பகுதியில் உள்ள தனியாா் வங்கிகள், அரசுடைமை வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன்களை வசூல் செய்துவருகின்றன. இதனால், ஏழைகள், மகளிா் சுய உதவிக் குழுவினா் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா். இவா்கள் வேலையிழப்பால் ஏற்கெனவே வாழ்வாதாரமின்றி தவித்துவரும் நிலையில், கடன் தவணைகளை செலுத்துவது இயலாத காரியம். ஆனால், இவா்களிடம் மிரட்டும் தொனியில் கடன் தொகையை கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கடன் வாங்கியோா் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.
எனவே, கடன் வசூலை வட்டியின்றி 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.