மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள்
By DIN | Published On : 24th May 2021 08:40 AM | Last Updated : 24th May 2021 08:40 AM | அ+அ அ- |

ஆக்சிஜன் செறிவூட்டிகளை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் வழங்கும் சிட்டி யூனியன் வங்கி நிா்வாகிகள். உடன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக சிட்டி யூனியன் வங்கி சாா்பில் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அண்மையில் வழங்கினா்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் துணை பொது மேலாளா் ராமசாமி, கிளை மேலாளா் மகாதேவன் ஆகியோா் எஞ்சிய 6 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் முன்னிலையில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் நவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.