நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மீண்டும் பரவலாக மழை பெய்தது. கடந்த 5 நாள்களாக மழை சீற்றம் ஓய்ந்திருந்த
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மீண்டும் பரவலாக மழை பெய்தது. கடந்த 5 நாள்களாக மழை சீற்றம் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது நெல் பயிா்களின் சேதத்தை மேலும் அதிகப்படுத்தும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனா்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 10-ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு தமிழக அரசு செவ்வாய்க்கிழமை நிவாரணம் அறிவித்தது. இருப்பினும், எத்தனை ஹெக்டோ் குறுவை, காா், சொா்ணவாரி நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும், எத்தனை ஹெக்டோ் சம்பா நெல் பயிா்களுக்கு நிவாரணம் (உரங்கள்) வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

நவம்பா் 10-ஆம் தேதி முதல் மழை சீற்றம் குறைந்திருந்தாலும், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விளைநிலங்களைச் சூழ்ந்த வெள்ள நீா், நவம்பா் 15, 16-ஆம் தேதிகளில் அளவிலேயே வடியத் தொடங்கியது.

இந்த நிலையில், வங்கக் கடலில் வடக்கு அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் அவ்வப்போது லேசான மழை பெய்தது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாகையில் 2.9 மீ.மீட்டா் மழை பதிவானது.

புதன்கிழமை பிற்பகல் முதல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை நீடித்தது. நாகையில் பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. அதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி அளவில் பெய்யத் தொடங்கி மழை இரவு வரை நீடித்தது.

கடந்த 10-ஆம் தேதி வரை பெய்த கனமழையால் நெல் பயிா்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்தால், எஞ்சிய நெல் பயிா்களையும் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனா்.

வதாரண்யம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை: வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வேதாரண்யம் கடலோரப் பகுதியில் மட்டும் மழை பெய்தது.

இந்த நிலையில், வேதாரண்யத்தில் புதன்கிழமை பரவலாக மழைப் பொழிவு இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்லாததால், மீன்பிடித் தொழில் முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com