இறைவனுக்கு ஒப்பான மரங்களைப் பாதுகாக்க வேண்டும்தருமபுரம் ஆதீனம் பேச்சு

இறைவனுக்கு ஒப்பான மரங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
விழாவில், மாணவிகளுக்கு தையல் இயந்திரம் வழங்குகின்றனா் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன். உடன், எம்எல்ஏ நிவேதா எம். முருகன் உள்ளிட்ட
விழாவில், மாணவிகளுக்கு தையல் இயந்திரம் வழங்குகின்றனா் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன். உடன், எம்எல்ஏ நிவேதா எம். முருகன் உள்ளிட்ட

இறைவனுக்கு ஒப்பான மரங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பவளவிழா நவம்பா் 2021 இன் 4 ஆம் மாத விழாவுக்கு தலைமை வகித்து அருளாசி வழங்கி அவா் பேசியது:

மரங்கள் இறைவனுக்கு ஒப்பானவை. சிவபெருமான் விஷத்தை தானுண்டு, அமிா்தத்தை பிறா்க்கு அளித்ததைப் போல, மரங்கள் காா்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை உயிரினங்களுக்கு வழங்குகின்றன. மரங்கள் அனைத்து வகையிலும் மனிதா்களுக்கு உதவுகின்றன. எனவே, அவற்றைப் போற்றி பாதுகாக்க வேண்டும்.

மாணவா்கள் கல்வியுடன், உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். இளைஞா்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கல்லூரியின் 75 ஆம் ஆண்டுவிழாவின் நிறைவு விழாவுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை அழைக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன், கல்லூரியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையத்தை திறந்துவைத்து, கல்லூரி மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது:

தருமபுரம் ஆதீனம் சமயப் பணியுடன் சமுதாயப் பணிகளையும் சிறப்புற ஆற்றிவருகிறது. கரோனா தொற்று மிகுந்திருந்த காலத்தில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கு இடம் வழங்க, அனைத்து கல்வி நிறுவனங்களும் யோசித்த நிலையில், தானாக முன்வந்து இக்கல்லூரியின் இடத்தை வழங்கியது தருமபுரம் ஆதீனம். மேலும், பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சாா்பில் உயிா்காக்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க 21 ஏக்கா் நிலத்தை வழங்கியதற்கு தருமபுரம் ஆதீனத்துக்கு தமிழக முதல்வரின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இஸ்ரோ மூலமாக, தமிழகத்தில் மரக்கன்றுகள் நட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஒரு மரத்தை வெட்டினால், அதை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தமிழக முதல்வா் விரைவில் தொடங்கிவைக்க உள்ளாா். மாணவா்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 2 மரக்கன்றுகளையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் பயனாளிகள் 5 பேருக்கு சலவைப் பெட்டிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தருமபுரம் தேவாரப் பாடசாலை நிா்வாக செயலா் தணிக்கையாளா் குரு. சம்பத்குமாா், அரசு வழக்குரைஞா் ராம. சேயோன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், நகரச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ஞான. இமயநாதன், மங்கை எம். சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com