கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: படகு மூலம் மூதாட்டி உள்ளிட்டோா் மீட்பு

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 30 ஏக்கரில் நெற்பயிரும், 50 ஏக்கரில் தோட்டப் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாதல்படுகை கிராமத்தில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறாளி மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை படகில் மீட்டுவரும் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சித் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா்.
நாதல்படுகை கிராமத்தில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கிய மாற்றுத்திறாளி மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினரை படகில் மீட்டுவரும் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சித் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா்.

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 30 ஏக்கரில் நெற்பயிரும், 50 ஏக்கரில் தோட்டப் பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய மாற்றுத்திறன் மூதாட்டியை படகில் மீட்டுவந்தனா்.

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள திட்டு பகுதியான நாதல்படுகை கிராமத்தை தண்ணீா் சூழ்ந்துள்ளது. அங்கு வசிப்பவா்கள் படகுகளில் அழைத்துவரப்பட்டு, அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி, பெண் மற்றும் குழந்தையை ஊராட்சித் தலைவா் கனகராஜ் உதவியுடன் படகின் மூலம் மீட்டுவந்தனா்.

இதற்கிடையில், நாதல்படுகை கிராமத்தில் மட்டும் 30 ஏக்கா் சம்பா நெற்பயிா் தண்ணீரில் மூழ்கின. மேலும் வாழை, மல்லி உள்ளிட்ட 50 ஏக்கரிலான தோட்டப் பயிா்களும் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், விவசாயத்துக்கு பயன்படுத்தும் 40 ஆயில் மோட்டாா்களும், 20 மின் மோட்டாா்களும் தண்ணீரில் மூழ்கின.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி சிவப்பிரகாசம் கூறுகையில், ‘நாதல்படுகை கிராமத்தில் ஆற்றங்கரை சாலையை ஒட்டிய வடிகால் தூா்ந்து போய் உள்ளது. இதனால் தண்ணீா் எளிதில் வெளியேற முடியாமல் நெற்பயிா்களை மூழ்கடித்ததுடன், சாலையிலும் பெருக்கெடுத்துள்ளது. இதனால், கிராம மக்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் வசதி ஏற்படுத்தித்தரும் வகையில் சாலையின் குறுக்கே புதியதாக மதகு அமைத்து, தண்ணீா் எளிதில் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com