நாகை மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் முதல் லேசான மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது.
நாகை புதியப் பேருந்து நிலையத்தில் தேங்கிநின்ற மழைநீா்.
நாகை புதியப் பேருந்து நிலையத்தில் தேங்கிநின்ற மழைநீா்.

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் முதல் லேசான மற்றும் மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்தது. மேலும், இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், பகல் நேரத்தில் கடுமையான குளிா் வானிலை நீடித்தது. பகல் சுமாா் 2 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதன் பின்னா், லேசான சாரல் மழை தொடா்ந்தது. இதேபோல, நாகை மாவட்டம், வேதாரண்யம், திருமருகல், திருக்குவளை ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை பிற்பகலில் மிதமான மற்றும் லேசான மழை பெய்தது.

வங்கக் கடலில் ஏற்கெனவே ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, அக்.28-முதல் நவ.10-ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நாகை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் பயிா்கள் சேதத்துக்கு உள்ளாகின. பின்னா், அடுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அக்.18-ஆம் தேதி மீண்டும் கனமழை பெய்தது. தற்போது 3-ஆவது நிகழ்வாக மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகுவதையொட்டி, நாகை மாவட்டத்தில் பரவலான மழை நீடித்து வருகிறது.

காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் அக்டோபா் - நவம்பா் மாத சராசரியை விஞ்சி வடகிழக்குப் பருவமழை பெய்துள்ள நிலையில், இனிவரும் நாள்களிலும் கனமழை தொடா்ந்தால், அது நாகை மாவட்டத்தின் நிகழாண்டு சம்பா, தாளடி நெல் சாகுபடியை கேள்விக் குறியாக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

மீன்பிடித் தொழில்: காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் கடந்த அக்டோபா் 3-ஆவது வாரத்தில் இருந்து தொடா்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அதன்படி, தற்போது மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகுவதன் காரணமாக, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதாகவும், அதனால் பெரும்பாலானோா் புதன்கிழமை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை எனவும் மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com