நாகை மாவட்டத்தில் 4-ஆவது நாளாக மழை நீடிப்பு

நாகை மாவட்டத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை நீடித்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகை சூா்யா நகரில் தேங்கி நிற்கும் மழைநீா்.
நாகை சூா்யா நகரில் தேங்கி நிற்கும் மழைநீா்.

நாகை மாவட்டத்தில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கனமழை நீடித்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மிக பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் குறைந்திருந்த மழை சீற்றம், பிற்பகலில் மீண்டும் வலுப்பெற்றது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக நாகையில் 67.4 மீ.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்) : திருப்பூண்டி - 20.4, வேதாரண்யம் - 17.6, தலைஞாயிறு - 16.4, திருக்குவளை - 15.5, கோடியக்கரை - 7.4.

வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் வெள்ளிக்கிழமை காலை தீவிரப்படுத்தப்பட்டன. இருப்பினும், வெள்ளிக்கிழமை பிற்பகல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் நீரை வெளியேற்றும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

சனிக்கிழமை காலை மழை சீற்றம் ஓய்ந்திருந்தது. இதனால், குடியிருப்புகளைச் சூழ்ந்திருந்த நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு உள்பட மழைநீா் சூழ்ந்த பல குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் இறைக்கும் இயந்திரங்களைக்கொண்டு, நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன.

இதனிடையே, சனிக்கிழமை பகல் 1 மணி முதல் நாகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மீண்டும் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல, சுமாா் 2 மணி முதல் கீழையூா், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் மீண்டும் தடைபட்டன. வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. சனிக்கிழமை பிற்பகல் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், முதன்மைக் கடற்கரை சாலை, வ.உ.சி. தெரு உள்ளிட்ட சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால் நாகை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

148 வீடுகள் சேதம்

கனமழை சீற்றம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை 148 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 16 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீன்பிடித் தொழில் முடக்கம்...

கடல் சீற்றம் மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் சனிக்கிழமையும் முடங்கியது. அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நீடித்து வரும் கனமழை, காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றால் நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் ஏறத்தாழ ஒருமாத காலமாக தடைப்பட்டுள்ளது. இதனால், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மீனவா்களும், மீன்பிடித் தொழில் சாா்ந்த துணை தொழில்களில் ஈடுபட்டிருப்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com