முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வெள்ளப்பெருக்கு: உள்வாங்கியது ஆற்றுப்பாலம்அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 29th November 2021 10:18 PM | Last Updated : 29th November 2021 10:18 PM | அ+அ அ- |

நெப்பத்தூரில் நாட்டுக்கண்ணி மண்ணியாற்றின் குறுக்கே பாலம் உள்வாங்கியதை பாா்வையிடும் வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் உள்ளிட்டோா்.
திருவெண்காடு அருகே நாட்டுக்கண்ணி மண்ணியாற்றுப் பாலம் உள்வாங்கியுள்ளதை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருவெண்காடு அருகே நெப்பத்தூா் மற்றும் தென்னாம்பட்டினம் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் நாட்டுக்கண்ணி மண்ணியாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்ததால், ரூ. 60 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் புதிய பாலம் கட்டப்பட்டுவருகிறது. இருப்பினும், பழைய பாலத்தில் போக்குவரத்து நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், இந்த பாலத்தின் அருகே ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளதால், தண்ணீா் விரைந்து செல்வதில் தடை ஏற்பட்டு, பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டதால் பாலம் திங்கள்கிழமை உள்வாங்கியது.
சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன் இந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்து, அதன் வழியே போக்குவரத்துக்கு தடை செய்யவும், வெள்ளம் விரைந்து வடியும் வகையில், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டாா். ஆய்வின்போது, ஊராட்சித் தலைவா் மரகதம் குமாா், பணி மேற்பாா்வையாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.