வேதாரண்யத்தில் நிறைவுக்கு வந்தது நிகழ் பருவ உப்பு உற்பத்தி

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் நிகழ்பருவ உப்பு உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவந்தனா்.
வேதாரண்யத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உப்புக் குவியல்.
வேதாரண்யத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உப்புக் குவியல்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் நிகழ்பருவ உப்பு உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவந்தனா்.

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2 ஆவது இடம் வகிக்கிறது. இங்கு, இரண்டு பெரிய தனியாா் நிறுவனங்கள், 670 சிறு உற்பத்தியாளா்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.

கடந்த 2018-ல் ஏற்பட்ட கஜா புயலின்போது, உள்புகுந்த கடல் களிமண் உப்பு உற்பத்தி பாத்திகளில் படிந்து பாதிப்பை ஏற்படுத்தியது. உரிய சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளாத நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் உப்பு உற்பத்தி பரப்பு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், நிகழாண்டு உப்பு உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. விட்டுவிட்டு பெய்த மழை, கடல்நீா் உள்புகுவது போன்ற வழக்கமான காரணங்களோடு, கரோனா தொற்று பொதுமுடக்கம் போன்ற காரணங்களாலும் உப்பு உற்பத்தி அவ்வப்போது தடைபட்டது. இருப்பினும், கடந்த ஆண்டைவிட சற்று கூடுதலாகவே உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.

வழக்கமாக, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வரை (அக்டோபா் முதல் 2 வாரங்கள் வரை) உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு மேலடுக்கு சுழற்சி போன்ற வானிலை மாற்றங்களால் பெய்த மழையால், உப்பு உற்பத்தி பாத்திகளில் மழைநீா் தேங்கியதால், 2 வாரங்களுக்கு முன்னதாகவே உப்பு உற்பத்தியை நிறைவுக்கு கொண்டு வந்தனா்.

இதற்கிடையே, உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்த குவியலாக வைக்கப்பட்டுள்ள உப்பை கனமழையிலிருந்து பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன், உப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட ஆயில் மோட்டாா் போன்ற உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com